கணியூர் பெயர்க்காரணங்கள்
மகாபாரதக் காலம்
மகாபாரதக் காலத்தில் பஞ்சபாண்டவர்கள் விடலாபுரத்தின் (இன்றைய தாராபுரம்) அரசனிடம் தஞ்சமடைந்து வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அக்காலத்தில் கணியூரில் எப்போதும் கனிகளுக்கு பஞ்சமில்லையென அறிந்த பாண்டவர்கள், கனிகளைப் பெறுவதற்காக இவ்வூரை நாடி வந்தனர். இதன் காரணமாக இவ்வூருக்கு முதலில் “கனியூர்” என்ற பெயர் ஏற்பட்டது; காலப்போக்கில் அது “கணியூர்” என மருவியது.
குமணவள்ளல் மன்னன் காலம்
குமணவள்ளல் என்ற மன்னன் இப்பகுதிகளை ஆட்சி செய்த காலத்தில், கணியூர் பிற ஊர்களிலிருந்து தனித்துவமாகக் கணிக்கப்பட்ட முக்கிய ஊராக விளங்கியதாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் இவ்வூருக்கு “கணியூர்” என்ற பெயர் வழங்கப்பட்டதாகவும் ஒரு வரலாற்றுக் கருத்து நிலவுகிறது.
கணிகை முனிவரின் ஆலோசனை
சங்க கால இலக்கியங்களான அகநானூறு மற்றும் புறநானூறு ஆகியவற்றில், ஆன்பொருநை நதி (இன்றைய அமராவதி நதி) என அழைக்கப்படும் நதியோரம் 108 சிவாலயங்கள் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. அவற்றில் ஒன்றாக விளங்கும் கணியூர் ஈசுவரன் கோவில், முற்காலத்தில் கணியூருக்கு வடக்கே அமைந்திருந்ததாகக் கூறப்படுகிறது. அக்காலத்தில் கணியூர் ஒரு சிறிய கிராமமாக, ஈசுவரன் கோவிலின் தெற்குப் பகுதியில் இருந்தது.அந்தக் காலகட்டத்தில் மக்கள் கொடிய நோய்கள், பஞ்சம் மற்றும் பசியால் பெரிதும் துன்புற்றனர். இந்நிலையில், சிவாலயத்திற்கு தரிசனத்திற்காக வந்த கணிகை முனிவர், மக்களின் வேதனையை உணர்ந்து, “உங்கள் ஊரின் வளம் குறைவதற்குக் காரணம் ஆலயம் குடியிருப்புகளின் வடபுறத்தில் அமைந்துள்ளதுதான்; நீங்கள் உங்கள் குடியிருப்புகளை ஆலயத்தின் வடபுறமாக மாற்றிக் கொள்ளுங்கள்” என அறிவுரை வழங்கினார்.மக்கள் முனிவரின் ஆலோசனையை ஏற்று தங்கள் குடியிருப்புகளை மாற்றிய பின்னர், வாழ்க்கையில் வளமும் நலனும் பெருகியதாக நம்பப்படுகிறது. மக்களுக்கு புதுவாழ்வு அளித்த கணிகை முனிவரின் நினைவாக, புதிதாக உருவான அந்தக் கிராமத்திற்கு “கணியூர்” என்ற பெயர் சூட்டப்பட்டதாக செவிவழிக் கதைகள் கூறுகின்றன.
முக்கனி சோலைகள்
அக்காலம் தொட்டே ஆண் பொருனை நதியோரம் மா, பலா, வாழை எனும் முக்கனிகளின் சோலைகள் நிறைந்து இருந்தன. மக்களுக்கு பல்வேறு கனிகளை வழங்கிய பகுதியாக இருந்ததனால், இவ்வூருக்கு கணியூர் என்ற பெயர் வந்ததாகவும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது.
இவ்வாறு, பல்வேறு புராண, வரலாற்று, மற்றும் செவிவழிக் கதைகள் அனைத்தும் கணியூர் என்ற பெயரின் மகத்துவத்தையும் பாரம்பரியத்தையும் வெளிப்படுத்துகின்றன.
புவியமைப்பு
கணியூர் என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தின் மடத்துக்குளம் வட்டத்தில் அமைந்துள்ளது. 5 சதுர கிலோமீட்டர் (1.9 சதுர மைல்) பரப்பளவில் பரவியுள்ள இவ்வூர், அந்த மாவட்டத்தின் 15 பஞ்சாயத்து நகரங்களில் ஒன்றாகும். இந்நகரப் பஞ்சாயத்து, நேரடி தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் தலைவர் ஒருவரால் வழிநடத்தப்படுகிறது.
அடையாளம்
கணியூர் “திராவிட இயக்கத்தின் தொட்டில்” என்றும் அழைக்கப்படுகிறது. அமராவதி நதிக்கரையில் ‘க’ எழுத்தால் தொடங்கும் கிராமங்களில் ஒன்றான இவ்வூர் திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. திராவிட இயக்கத்தின் பல்வேறு தலைவர்கள் இங்கு பிறந்துள்ளனர்; அவர்களில் கே.ஏ. முருகேசன், கே.ஏ. மதியழகன், கே.ஏ. கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் முக்கியமானவர்கள்.
















கோவில்கள்
பள்ளிகள்
தமிழ்ப் பாரம்பரிய பாதுகாப்பகம்
மண்ணின் மைந்தர்கள்